தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
மு.வரதராசனார் உரை:
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர்.
பரிமேலழகர் உரை:
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு – தாம் இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி, கற்றறிந்தார் காமுறுவர் – கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர்.
(தாம் இன்புறுதலானது, நிகழ்வின் கண் சொற்பொருள்களின் சுவை நுகர்வானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம் எய்துதல். உலகு இன்புறுதலாவது: ‘இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன எல்லாம் அறியப்பெற்றோம்’ என்றும் ‘யாண்டு பலவாக நரையில மாயினேம்’ (புறநா. 191) என்றும் உவத்தல். செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழத்தல் என்ற இவற்றான் துன்புறுதலும், பலரையும் பகை யாக்கலும் உடைத்து என அறிந்து, அதனைக் காமுறாமையின் ‘கற்றறிந்தார்’ என்றும், கரும்பு அயிறற்குக் கூலிபோலத்தாம் இன்புறுதற்கு உலகு இன்புறுதல் பிறவாற்றான் இன்மையின் அதனையே காமுறுவர் என்றும் கூறினார்.).
உரை:
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தம் மனத்தை மகிழ்விக்கும் கல்வியினால் உலகம் மகிழ்வதைக் கண்டு கற்று அறிந்தவர்கள் மேலும் கற்கவே விரும்புவார்கள்.
மணக்குடவர் உரை:
தாம் இனிதாக நுகர்வதொன்றை உலகத்தார் நுகர்ந்து இன்புறுவாராகக் கண்டால் அதற்கு இன்புறுவர் கற்றறிந்தவர்.
இஃது அழுக்காறு செய்யாது இன்புறுதல் அறமாதலின் அது கல்வியானே வருமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தாங்கள் இன்பமடைவதற்குக் காரணமான கல்விக்கு உலகமானது இன்பமடைவதைக் கண்டறிந்த கற்றறிந்தவர் பின்னும் அக்கல்வியினையே பெரிதும் விரும்புவர்.
Transliteration:
thaamin puRuvadhu ulagin puRakkaNdu
kaamuRuvar katraRinh thaar
Translation:
Their joy is joy of all the world, they see; thus more
The learners learn to love their cherished lore.
Explanation:
The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it.
மறுமொழி இடவும்