கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
மு.வரதராசனார் உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.
பரிமேலழகர் உரை:
(தூது விடக் கருதியாள் சொல்லியது, ) கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் – துஞ்சாது வருந்துகின்ற என் கயல் போலும் உண்கண்கள் யான் இரந்தால் துஞ்சுமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் – கனவிடைக் காதலரைக் காண்பேன், கண்டால் அவர்க்கு யான் ஆற்றியுளேனாய தன்மையை யானே விரியச் சொல்வேன். (‘கயலுண்கண்’ என்றாள்,கழிந்த நலத்திற்கு இரங்கி. உயல் – காம நோய்க்குத் தப்புதல். தூதர்க்குச் சொல்லாது யாம் அடக்குவனவும், சொல்லுவனவற்றுள்ளும் சுருக்குவனவற்றின் பரப்பும் தோன்றச் சொல்வேன் என்னும் கருத்தால், ‘சாற்றுவேன்’என்றாள். இனி, அவையும் துஞ்சா: சாற்றலுங்கூடாது என்பது படநின்றமையின், ‘மன்’ ஒழியிசைக்கண் வந்தது. முன்னும் கண்டாள் கூற்றாகலின், கனவு நிலை உரைத்தலாயிற்று.).
உரை:
நான் வேண்டுவதற்கு இணங்கி என் மை எழுதிய கயல் விழிகள் உறங்கிடுமானால், அப்போது என் கனவில் வரும் காதலர்க்கு நான் இன்னமும் உயிரோடு இருப்பதைச் சொல்லுவேன்.
சாலமன் பாப்பையா உரை:
கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும் தன்மையைச் சொல்வேன்.
மணக்குடவர் உரை:
என்னுடைய கயல்போலும் உண்கண் யான் வேண்டிக் கொள்ள உறங்குமாயின் நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண்மையைச் சொல்லுவேனென்று உறங்குகின்றதில்லையே. மன்- ஒழியிசையின்கண் வந்தது. கயலுண்கண்- பிறழ்ச்சி யுடைய கண்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
கயல்போன்ற எனது மையுண்ட கண்கள் தூங்குமானால் கனவில் காதலரைக் காண்பேன். கண்டால் அவருக்கு யான் பொறுத்துக் கொண்டிருக்கும் நிலைமையினைக் கூறுவேன்.
Transliteration:
kayalunkan yaanirappath thunjir kalandhaarkku
uyalunmai saatruvaen man
Translation:
If my dark, carp-like eye will close in sleep, as I implore,
The tale of my long-suffering life I’ll tell my loved one o’er.
Explanation:
If my fish-like painted eyes should, at my begging, close in sleep, I could fully relate my sufferings to my lord.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More