கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
மு.வரதராசனார் உரை:
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.
பரிமேலழகர் உரை:
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் – ஒருவன் கண்ணிற்கு அணியும்கலமாவது கண்ணோட்டம்; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் – அக்கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையரால் புண் என்று அறியப்படும்.
(வேறு அணிகலம் இன்மையின் ‘கண்ணிற்கு அணிகலம்’ என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, ‘புண் என்று உணரப்படும்’ என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்றகண்ணின் குற்றம் கூறப்பட்டது.).
உரை:
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.
மணக்குடவர் உரை:
கண்ணிற்கு அழகு செய்யும் அணிகலமாவது கண்ணோட்டமுடைமை: அஃதில்லையாயின் அவை புண்ணென்றறியப்படும். இது கண்ணோட்டமில்லாத கண்ணிற்குப் பெயர் கூறிற்று.
Transliteration:
kaNNiRku aNikalam kaNNoattam aqdhindrael
puNNendru uNarap padum
Translation:
Benignity is eyes’ adorning grace;
Without it eyes are wounds disfiguring face.
Explanation:
Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.
மறுமொழி இடவும்