குறள் 1325

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

மு.வரதராசனார் உரை:

தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.

பரிமேலழகர் உரை:

(தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.) தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் – ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்து – அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து. (உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை என்னும் கருத்தால், ‘தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து’ என்றான். ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், ‘கூறற்கரிது’ என்பான், ‘அப்பெற்றியதொன்று’ என்றான். ‘தவறின்றி’ ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று’ என்பதாம்.).

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:

ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.

மணக்குடவர் உரை:

தாம் தவறிலராயினும் தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள்களை நீங்குதலானே, அஃது ஓரின்பமுடைத்து. இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும் ஊடலிற் கூடல் நன்றென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

ஆடவரிடத்தில் தவறு இல்லையென்றாலும் இருப்பதுபோல ஊடுதல் செய்கின்ற (தாம் விரும்பிய), மகளிரது மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது காதலர்க்கு அப்படிப் பட்டதோர் இன்பம் தரும் தன்மையுடையதாம்.

Transliteration:

thavarilar aayinum thaamveezhvaar mendroal
akaralin aangon rudaiththu

Translation:

Though free from fault, from loved one’s tender arms
To be estranged a while hath its own special charms.

Explanation:

Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.

Share

Recent Posts

குறள் 1330

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1329

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More

7 வருடங்கள் ago

குறள் 1328

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More

7 வருடங்கள் ago

குறள் 1327

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More

7 வருடங்கள் ago

குறள் 1326

உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More

7 வருடங்கள் ago

குறள் 1324

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. மு.வரதராசனார் உரை: காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய… Read More

7 வருடங்கள் ago