பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.
மு.வரதராசனார் உரை:
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?.
பரிமேலழகர் உரை:
(அவ்வியற்பழிப்புப் பொறாது தன் நெஞ்சிற்குச் சொல்லியது.) நெஞ்சே – நெஞ்சே; கொடியார்க்கு என் வாடு தோள் பூசல் உரைத்து – இவள் கொடியார் என்கின்றவர்க்கு நீ சென்று என் மெலிகின்ற தோளினால் விளைகின்ற ஆரவாரத்தைச் சொல்லி; பாடு பெறுதியோ – ஒரு மேம்பாடு எய்தவல்லையோ? வல்லையாயின் அதனை ஒப்பதில்லை. (‘கொடியார்க்கு’ என்பது கொடியர் அல்லர் என்பது தோன்ற நின்ற குறிப்புச்சொல். ‘வாடு தோள்’ என்பது அவை தாமே வாடாநின்றன என்பது தோன்ற நின்றது. பூசல்: ஆகுபெயர். அஃது அவள் தோள் நோக்கி இயற்பழித்தல் மேலும், அதனால் தனக்கு ஆற்றாமை மிகன் மேலும் நின்றது. ‘நின்னுரை கேட்டலும் அவர் வருவர்; இவையெல்லாம் நீங்கும்; நீங்க எனக்குக் காலத்தினாற்செய்த நன்றியாமாகலின், அதன் பயனெல்லாம் எய்துதி’ என்னும் கருத்தால் ‘பாடு பெறுதியோ’? என்றாள்.).
உரை:
நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?.
மணக்குடவர் உரை:
நெஞ்சே! இக்கொடுமை செய்தவர்க்கு எனதுதோள் வாடுதலானே ஊரிலெழுந்த அலரைச் சென்று சொல்லி நீயும் நினது வாட்டம் நீங்கி அழகு பெறுவாயோ?. இது நீ அவர்பாற் போகல் வேண்டுமென்று நெஞ்சிற்குத் தலைமகள் சொல்லியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நெஞ்சே! இவர் கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலரிடம் சென்று என் மெலிந்த தோள்கள் செய்யும் ஆரவாரத்தினைக் கூறி ஒரு மேம்பாடு அடையமாட்டாயோ?. அப்படிச் செய்தால் சிறந்ததாகும்.
Transliteration:
paadu perudhiyo nenje kotiyaarkken
vaatudhot poosal uraiththu
Translation:
My heart! say ought of glory wilt thou gain,
If to that cruel one thou of thy wasted arms complain?.
Explanation:
Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More