பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
மு.வரதராசனார் உரை:
அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது.
பரிமேலழகர் உரை:
பகையத்துப் பேடி கை ஓள்வாள் – எறியப்படும் பகை நடுவண் அதனை அஞ்சும் பேடி பிடித்த கூர்வாளை ஒக்கும்; அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல் – சொல்லப்படும் அவை நடுவண் அதனை அஞ்சுமவன் கற்ற நூல். (பேடி : பெண் இயல்பு மிக்கு ஆண் இயல்பும் உடையவள்.களமும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும் பிடித்தவள் குற்றத்தால் வாள் சிறப்பின்றாயினாற் போல, அவையும் வாய்த்துத் தானும் நன்றாய் இருந்ததேயாயினும், கற்றவன் குற்றத்தால் நூல் சிறப்பின்றா யிற்று.) .
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.
மணக்குடவர் உரை:
பகையின்கண் அஞ்சுமவன் பிடித்த கூர்வாள் போலும், அவையின்கண் அஞ்சுமவன் கற்றநூலும்.மேல் பயனில்லை யென்றார் இங்குப் பயனில்லாதவாறு காட்டினார்.
Transliteration:
pakaiyakaththup paetikai oLvaaL avaiyakaththu
anju mavan-katra nool
Translation:
As shining sword before the foe which ‘sexless being’ bears,
Is science learned by him the council’s face who fears.
Explanation:
The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes.
மறுமொழி இடவும்