பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
மு.வரதராசனார் உரை:
துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப் பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) உள்ளம் உடைந்து உக்கக்கால் – காதலி நம் பிரிவினையாற்றாது உள்ளம் உடைந்து இறந்துபட்டவழி; பெறின் என் – நம்மைப் பெறக்கடவளானால் என்? பெற்றக்கால் என் – அதுவன்றியே பெற்றால் என்? உறின் என்? – அதுவன்றியே மெய்யுறக் கலந்தால்தான் என்? இவையொன்றானும் பயன் இல்லை. (இம்மூன்றும் உடம்பொடு புணர்த்துக் கூறப்பட்டன. அதன்மேலும் முன்னை வழக்குண்மையின், அதற்கு முன்னே யான் செல்ல வேண்டும் என்பது கருத்தாகலின், விதுப்பாயிற்று. இது தலைமகள் கூற்றாயவழி இரங்கலாவதல்லது விதுப்பாகாமை அறிக.).
உரை:
துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?.
சாலமன் பாப்பையா உரை:
என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.
மணக்குடவர் உரை:
எனது உள்ளம் உடைந்து போயின் பின்பு அவரைப்பெறுவேமென்று இருந்ததனாற் பயன் என்னுண்டாம்? முன்பே பெற்றேமானேம், அதனால் பயன் என்னுண்டாம்? இப்பொழுது உற்றேமாயின் அதனால் பயன் என்னுண்டாம்?. இது வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காதலி நம் பிரிவினைப்பொறுக்க முடியாமல் இறந்துவிட்டால் நம்மைப் பெற்றால் என்ன? அதுவன்றிநம்மைப் பெற்றதனால்தான் என்ன?. மேலும் மெய்யுறக் கலந்தால்தான் என்ன? இவையொன்றினாலும் பயனில்லை.
Transliteration:
perin-ennaam petrakkaal ennaam urinennaam
ullam udaindhukkak kaal
Translation:
What’s my return, the meeting hour, the wished-for greeting worth,
If she heart-broken lie, with all her life poured forth?.
Explanation:
After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More