குறள் 167:
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
மு.வரதராசனார் உரை:
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
பரிமேலழகர் உரை:
அழுக்காறு உடையானை – பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் – திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள். ‘தவ்வையைக் காட்டி’ என்பது ‘அறிவுடை அந்தணன் அவளைக் காட்டென்றானே’ (கலி.மருதம். 7) என்பது போல உருபு மயக்கம். ‘மனத்தைக் கொடுவித்துஅழுக்காறுடையன் ஆயினானை’ என்று உரைப்பாரும் உளர்.).
உரை:
செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.
மணக்குடவர் உரை:
அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக்காறு செய்து, தன் தவ்வையாகிய மூதேவிக்குக் காட்டி இவன்பாற் செல்லென்று போம், இது நல்குரவிற்குக் காரணங் கூறிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பிறருடைய செல்வம் கண்டபோது பொறாமைப் படுகின்றவனைப் பார்த்துத் திருமகள் தானும் பொறாமல் தனக்கு மூத்தவளைக் காட்டி அவனிடம் சென்று இருக்குமாறு செய்வாள்.
Translation:
From envious man good fortune’s goddess turns away,
Grudging him good, and points him out misfortune’s prey.
Explanation:
Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More