சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
மு.வரதராசனார் உரை:
மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
பரிமேலழகர் உரை:
சென்ற இடத்தால் செலவிடாது – மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது, தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு – அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு.
(வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும் ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது செல்லாமையின், ‘இடத்தால்’ என்றார். ‘விடாது’ என்பது கடைக்குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.).
உரை:
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.
மணக்குடவர் உரை:
உள்ளஞ் சென்ற விடத்தே உடம்பையுஞ் செல்லவிடாது, தீமையை நீக்கி நன்மைப் பகுதியிலே செலுத்துவது அறிவாவது. இது காம நுகர்ச்சியின்கண் பழியும் பாவமும் பொருட்கேடும் வாராமற் செலுத்துவது அறிவென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
மனத்தினை அது சென்ற வழியிலே போக விடாமல் தீமையிலிருந்து நீக்கி நல்லவையிடத்தே செலுத்துவது அறிவாகும்.
Transliteration:
sendra idaththaal selavitaa theedhoree-i
nandrinpaal uyppa thaRivu
Translation:
Wisdom restrains, nor suffers mind to wander where it would;
From every evil calls it back, and guides in way of good.
Explanation:
Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdom.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். மு.வரதராசனார் உரை: காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல்… Read More
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. மு.வரதராசனார் உரை: காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும்… Read More
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. மு.வரதராசனார் உரை: நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை… Read More
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். மு.வரதராசனார் உரை: ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த… Read More
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. மு.வரதராசனார் உரை: உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது… Read More
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. மு.வரதராசனார் உரை: தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம்… Read More