குறள் 32:
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
மு.வரதராசனார் உரை:
ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
பரிமேலழகர் உரை:
அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை – ஒருவனுக்கு அறஞ்செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கு கேடு இல்லை – அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை. (‘அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை’. என மேற்சொல்லியதனையே அநுவதித்தார், அதனால் கேடு வருதல் கூறுதற் பயன் நோக்கி. இதனான் அது செய்யாவழிக் கேடு வருதல் கூறப்பட்டது.).
உரை:
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.
சாலமன் பாப்பையா உரை:
அறம் செய்வதை விட நன்மையும் இல்லை. அதைச் செய்ய மறப்பதைவிட கெடுதியும் இல்லை.
மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு அறஞ் செய்தலின் மேற்பட்ட ஆக்கமுமில்லை; அதனைச் செய்யாமையின் மேற்பட்ட கேடுமில்லை. இஃது அறஞ் செய்யாக்காற் கேடுவருமென்று கூறிற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஆறாம் செய்வதனைவிட மேம்பட்ட செல்வமும் இல்லை; அந்த அறத்தினை அஞ்ஞானத்தால் மறைப்பதை விடப் பெரிய தீமையும் இல்லை.
Translation:
No greater gain than virtue aught can cause; No greater loss than life oblivious of her laws.
Explanation:
There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.
மறுமொழி இடவும்