கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
மு.வரதராசனார் உரை:
செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.
பரிமேலழகர் உரை:
கருவியும் – வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; காலமும் – அதற்கு ஏற்ற காலமும்; செய்கையும் – அது செய்யுமாறும்; செய்யும் அருவினையும் – அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; மாண்டது அமைச்சு – வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான். (கருவிகள் – தானையும் பொருளும், காலம் – அது தொடங்குங் காலம், ‘செய்கை’ எனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது என்பார், ‘அருவினை’ என்றார். இவை ஐந்தினையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.).
கலைஞர் மு.கருணாநிதி உரை:
உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யத் தேவையான பொருள்கள், செய்வதற்கு ஏற்ற காலம், செய்யும் முறை, செய்யும் செயல் ஆகிய அனைத்திலும் நன்மை விளையும்படி எண்ணுபவரே அமைச்சர்.
மணக்குடவர் உரை:
செய்தற்கு அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், அதனையிடையூறு படாமற் செய்து முடித்தலுமாகிய இந்நான்கும் மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான். செய்தற்கு அரியவினையாவது மறுமண்டலங்கோடல்; கருவியாவது யானை- குதிரை முதலிய படை: காலமாவது நீரும் நிழலுமுள்ள காலம்; செய்தலாவது மடியின்றிச் செய்தல்.
Transliteration:
karuviyum kaalamum seykaiyum seyyum
aruvinaiyum maaNdadhu amaichchu
Translation:
A minister is he who grasps, with wisdom large,
Means, time, work’s mode, and functions rare he must discharge.
Explanation:
The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself).
மறுமொழி இடவும்