உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
மு.வரதராசனார் உரை:
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
பரிமேலழகர் உரை:
உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் – தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையானாயின், உள்ளிய எல்லாம் உடன் எய்தும் – தான் கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும். ( ‘உள்ளத்தால்’ என வேண்டாது கூறிய அதனான், ‘அருளுடை உள்ளம்’ என்பது முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், ‘உள்ளிய எல்லாம் உடன் எய்தும்’ என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).
உரை:
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.
மணக்குடவர் உரை:
தன்னெஞ்சினால் வெகுளியை நினையானாகில் தானினைத்தனவெல்லாம் ஒருகாலத்தே கூடப்பெறுவன்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
துறவியானவன் தன மனத்தால் கோபத்தினை ஒருபோதும் நினைக்காமல் இருப்பானானால், அவன் கருதிய செல்வங்கள் எல்லாவற்றினையும் ஒருங்கே பெறுவான்.
Transliteration :
uLLiya thellaam udaneydhum uLLaththaal
uLLaan vekuLi enin
Translation:
If man his soul preserve from wrathful fires,
He gains with that whate’er his soul desires.
Explanation:
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.
மறுமொழி இடவும்