ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.
மு.வரதராசனார் உரை:
காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் – என்னுயிரைச் செல்லாமல் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக; மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது – அழுங்குவிப்பாரின்றி அவர் செல்வராயின், அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும்; சென்றால் பின் அவரைக் கூடுதல் எனக்கு அரிதாம். (ஆளுதற்கு அமைதல்: இறைவராதற்குத் தெய்வத்தால் ஏற்புடையராதல். மற்று: வினைமாற்றின்கண் வந்தது.)
உரை:
காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக் காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப் பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.
மணக்குடவர் உரை:
காக்கலாமாயின் அமைந்தார் தம்முடைய பிரிவைக் காக்க; அவர் பிரிவராயின் பின்பு கூடுதல் அரிது. மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு யாது சொல்வேனென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எனது உயிர்போகாமல் காப்பாற்ற வேண்டுமானால் அதற்குரிய தலைவர் பிரிந்து செல்லாமல் நிறுத்துவாயாக, நிறுத்துவாரின்றி அவர் சென்றுவிட்டால் என்னுயிரும் செல்லும். பின்பு அவரைக் கூடுதல் முடியாததாகும்.
Transliteration:
ompin amaindhaar pirivoampal matravar
neengin aridhaal puNarvu
Translation:
If you would guard my life, from going him restrain
Who fills my life! If he depart, hardly we meet again.
Explanation:
If you would save (my life), delay the departure of my destined (husband); for if he departs, intercourse will become impossible.
மறுமொழி இடவும்