குறள் 205:
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
மு.வரதராசனார் உரை:
யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
பரிமேலழகர் உரை:
இலன் என்று தீயவை செய்யற்க -யான் வறியன் என்று கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை ஒருவன் செய்யாது ஒழிக, செய்யின் பெயர்த்தும் இலன் ஆகும் – செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம். (அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம் என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின் படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை ‘உளனா என் உயிரை உண்டு’ (கலித்.குறிஞ்சி.22) என்பதனாலும் அறிக. மற்று – அசை நிலை. ‘இலம்’ என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன் எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின், அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும் வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.).
உரை:
வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈ.டுபடக்கூடாது; அப்படி ஈ.டுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.
மணக்குடவர் உரை:
நல்கூர்ந்தேமென்று நினைத்துச் செல்வத்தைக் கருதி தீவினையைச் செய்யாதொழிக; செய்வானாயின் பின்பும் நல்குரவினனாவன். அது செல்வம் பயவாது. இது வறுமை தீரத் தீமை செய்யினும் பின்பும் வறியனாகுமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
நான் வறியவன் என்று நினைத்து அதனைப் போக்க ஒருவன் தீய செயல்களைச் செய்யா திருப்பானாக; அப்படிச் செய்வானானால், மீண்டும் வறியவனாவான்.
Translation:
Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still.
Explanation:
Commit not evil, saying, “I am poor”: if you do, you will become poorer still.
மறுமொழி இடவும்