அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
மு.வரதராசனார் உரை:
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது , பொழில் விளையாட்டு விருப்பான் ஆயம் நீங்க , அதன்கண் தமியளாய் நின்றாளை , வேட்ட விருப்பான் இளையார் நீங்கத் தமியனாய் வந்து கண்ணுற்ற தலைமகன் , அவள் வனப்புத் தன்னை வருத்தம் உறுவித்தலைச் சொல்லுதல் . இது , கண்ணுற்ற பொழுதே நிகழ்வதாகலின் , முதற்கண் கூறப்பட்டது .]
(தலைமகள் உருவு முதலியன முன் கண்டறிவன அன்றிச் சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது.) கனங்குழை – இக்கனவிய குழையை உடையாள்; அணங்கு கொல் – இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வமகளோ? ஆய்மயில் கொல் – அன்றி ஒரு மயில் விசேடமோ? மாதர்கொல் – அன்றி ஒருமானுட மாதரோ; என் நெஞ்சு மாலும் – இவளை இன்னள் என்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது. (ஓ – அசை. ஆய் மயில்: படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்: மயிற் சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். ‘கனங்குழை’: ஆகுபெயர். ‘கணங்குழை’ என்ற பாடம் ஓதி, ‘பலவாய்த் திரண்ட குழை’ என்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவும், தன் வருத்தமும் பற்றி ‘அணங்குகொல்’ என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி, ‘ஆய்மயில்கொல்’ என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி ‘மாதர்கொல்’ என்றும் கூறினார்.).
உரை:
எனை வாட்டும் அழகோ! வண்ண மயிலோ! இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்.
சாலமன் பாப்பையா உரை:
அதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா? நல்லமயிலா? பெண்ணா? யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.
மணக்குடவர் உரை:
இக்கனங்குழையை யுடையாள் தெய்வங்கொல்லோ? நல்லதோர் மயில் கொல்லோ? அன்றி, மக்களுள்ளாள் கொல்லோ? என்மனம் மயங்கா நின்றவற்றுள் யாதோ?.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பொருந்திய குழையுடைய இப்பெண் ஒரு தெய்வ மகளோ?. அல்லது தோகைவிரிக்கும் ஒரு மயிலோ? அல்லது மாதுதானோ?. இன்னவள் என்று அறிய முடியாமல் எனது நெஞ்சு மயங்குகின்றது.
Transliteration:
aNangukol aaimayil kolloa kananguzhai
maadharkol maalum-en nenju
Translation:
Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear,
Is she a maid of human kind? All wildered is my mind!.
Explanation:
Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed.
மறுமொழி இடவும்