கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்.
மு.வரதராசனார் உரை:
எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.
பரிமேலழகர் உரை:
(ஒருவழித்தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.) (தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார் கருதுக,) எம் காதலர் கண்ணுள்ளின் போகார் – எம்முடைய காதலர் எம் கண்ணகத்து நின்றும் போகார்; இமைப்பின் பருவரார் – யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால் வருந்துவதும் செய்யார்; நுண்ணியர் – ஆகலான் காணப்படா நுண்ணியர். (இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின் ‘கண்ணுள்ளின் போகார்’ என்றும், இமைத்துழியும் அது நிற்றலான் ‘இமைப்பின் பருவரார்’ என்றும் கூறினாள்.).
உரை:
காதலர், கண்ணுக்குள்ளிருந்து எங்கும் போக மாட்டார்; கண்ணை மூடி இமைத்தாலும் வருந்த மாட்டார்; காரணம், அவர் அவ்வளவு நுட்பமானவர்.
சாலமன் பாப்பையா உரை:
என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர்.
மணக்குடவர் உரை:
என் கண்ணுள் நின்று நீங்கார்; இமைப்பேனாயின், இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார்: ஆதலான் எம்மாற் காதலிக்கப்பட்டார் நுண்ணியவறிவை யுடையார்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
எமது காதலர் எமது கண்ணுள்ளிருந்து போகமாட்டார். அறியாமல் இமைத்தேனானாலும் அதனால் வருத்தப்படமாட்டார். ஆகையால் நுட்பமான தன்மையுடையவராவார்.
Transliteration:
kaNNuLLin poakaar imaippin parukuvaraa
nuNNiyar-em kaadha lavar
Translation:
My loved one’s subtle form departs not from my eyes;
I wink them not, lest I should pain him where he lies.
Explanation:
My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal.
மறுமொழி இடவும்