இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
மு.வரதராசனார் உரை:
வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.
பரிமேலழகர் உரை:
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் வன்மையின் – வறுமையான் வருந்துன்பத்தை முயன்று நீக்கக்கடவேம் என்று கருதாது இரந்து நீக்கக் கடவேம் என்று கருதும் வன்மை போல; வன்பாட்டது இல் – வலிமைப்பாடுடையது பிறிது இல்லை. (நெறியாய முயற்சி நிற்க, நெறியல்லாத இரவான் தீர்க்கக் கருதுதலின், வன்மையாயிற்று, வன்பாடு – முருட்டுத் தன்மை அஃதாவது, ஓராது செய்து நிற்றல். இதனான் ‘வறுமை தீர்த்தற்கு நெறி இரவன்று’ என்பது கூறப்பட்டது.) .
உரை:
வறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
இல்லாமையால் வரும் துன்பத்தை (உழைத்துப் போக்காது) பிச்சை எடுத்துப் போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணும் கொடுமையிலும் கொடுமை வேறு இல்லை.
மணக்குடவர் உரை:
வறுமையாலுற்ற துன்பத்தைப் பிறர்மாட்டு இரந்து பெற்ற பொருளினாலே தீர்ப்பே மென்று கருதுகின்ற வன்மைபோல, வன்பாயிருப்பது பிறிது இல்லை. இஃது இரந்தாலும் நல்குரவு தீரா தென்றது.
Transliteration:
inmai idumpai irandhudheer vaamennum
vanmaiyin vanpaatta thil
Translation:
Nothing is harder than the hardness that will say,
‘The plague of penury by asking alms we’ll drive away’.
Explanation:
There is no greater folly than the boldness with which one seeks to remedy the evils of poverty by begging (rather than by working).
மறுமொழி இடவும்